இறைவன் ஒருவன். அவன் வானத்தில் இருக்கிறான்.
வானத்திற்கு அப்பாலும் இருக்கிறான். பூமியில் இருக்கிறான். பூமிக்குள்ளேயும் இருக்கிறான். பூமியாகவும் இருக்கிறான். இப்படி அவன் இல்லாத இடம் என்பதே இல்லை. நோக்கும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருளென்று, அவனை ஞானிகள் பாடுவது இதற்காகத் தான். கண்ணில் தெரியும் காட்சி, தெரியாத காட்சி, காதுகளில் கேட்கும் ஒலி, கேட்காத ஒலி, புலன்கள் அறியும் பொருள், அறியாத பொருள் அனைத்துமே அவனே. அத்தகைய சர்வ வியாபியாகிய இறைவன் பூமிக்கு வருவானா? மனிதர்களோடு மனிதராய் நடமாடுவானா? திசை தெரியாமல் தடுமாறும் நெஞ்சங்களுக்கு நல் வழிகாட்ட துணை இருப்பானா? என்று ஆயிரம் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்கும் நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கிறது.
நமது புராணங்களும், இதிகாசங்களும் தர்ம சாஸ்திரங்களும் இறைவன் பூமிக்கு வருவான். மனிதனருகில் மனிதரைப் போலவே நடமாடுவான். அவன் பெயர் அவதார புருஷன் என்கிறது.. அவதாரம் என்றால் என்ன? அவதாரம் என்ற வடமொழி சொல்லுக்கு மேலே இருந்து கீழே இறங்கி வருதல் என்பது பொருளாகும். அவதார புருஷன் என்றால் மேலே மிகவும் மேலே மனிதர்களால் எட்டிப்பிடிக்க முடியாத மாபெரும் உயரத்தில் இருந்து நமக்காக மண் மீது புழுதிபடிய வாழ்வதற்காக இறங்கி வந்த பரமாத்மா என்பதாகும். எதற்காக பரமாத்மா இறங்கி வரவேண்டும்? இறைவன் என்ற நிலையில் சகலவிதமான திருக்கோலத்தில் அவனுடைய சந்நிதானத்திலேயே இருக்க வேண்டியது தானே. மனித ஜென்மங்களை திருத்த வேண்டுமென்றால், இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால், உட்கார்ந்த இடத்திலேயே ஒரே நொடியில் செய்து விடலாமே? அதை செய்யாமல் எதற்காக இறங்கி வரவேண்டும்?
சர்வ வல்லமே பொருந்திய நானே! சர்வலோகத்தை படைத்த நானே!! உனக்காக இறங்கி வருகிறேன் என்றால், அற்ப மானிடன் நீ! எம்மாத்திரம் உன் ஆணவத்தை விட்டு இறங்கு. உன் ஆசையை விட்டு இறங்கு. உன் மோகத்தை விட்டு இறங்கு. என்று நமக்கு பாடம் புகட்ட இறங்கி வருகிறான். அது மட்டுமல்ல, மனித சரீரத்தை தற்காலிகமாக பெற்ற அவன் அந்த சரீரத்திற்கு சம்பளமாக சில துயரங்களையும், அவமானங்களையும் சந்திக்கிறான் அது ஏன்? கடவுளாகிய நானே மாமிச வடிவத்தில் வந்து விட்டால், துக்கப்பட்டு ஆகவேண்டும். விதைத்த விதையை, அறுத்தாக வேண்டும். நீயும் அப்படிதான் விதி என்ற வட்டத்திலிருந்து ஓடிவிட முடியாது. கர்மா என்ற நீதிதேவனின் சட்டத்தை உன்னால் மீறி விட முடியாது. படு நன்றாக படு. அவமானப்படு. ஆடை துவைக்கப்படுவது போல், அலைகளில் அகப்பட்ட துரும்பு பாறைகளில் மொத்தப்படுவது போல், துக்கப்படு. அப்போது தான் உன் ஆத்மாவின் அழுக்கு வெளுக்கும். பிறவியின் வினை வெந்து மடியும் என்றும் நமக்கு உணர்த்தவே.
அவதாரத்தின் நோக்கம் இது மட்டுமல்ல. இன்னும் இருக்கிறது. குழந்தை பெறுகிறோம். அந்த குழந்தை நமது இரத்தத்தாலும், மாமிசத்தாலும் உருவானது தான் என்றாலும், அதை பார்க்கும் போதெல்லாம் ஆனந்த பரவசம் நமக்குள் ஊற்றெடுத்து ஓடுகிறது. குழந்தையை அணைப்பது இன்பம். தோளில் சாய்ப்பது இன்பம். இடுப்பில் சுமப்பது இன்பம். விரல்பிடித்து நடக்க வைப்பது இன்பம். அது ஓடினால் இன்பம். ஆடினால் இன்பம். பாடினால் இன்பம். குழந்தையின் ஒவ்வொரு செயலுமே நமக்கு இன்பம். இந்த இன்பத்தை விட்டு விட்டு குழந்தையை அணைக்கும் சுகத்தை விட்டு விட்டு காசு, பதவி அழைத்தாலும் தாசியின் மடி வலைவீசினாலும் அங்கே நாம் போவோமா? ஒரு நல்ல மனிதன் தாயின் பாதங்களிலும், குழந்தையின் விரல் நுனியிலும் சொர்க்கத்தை காண்பான். அந்த நல்ல மனிதனை போன்றவன் தான் இறைவன்.
இறைவனுக்கு நாம் குழந்தை இறைவனால், படைக்கப்பட்ட ஜீவன் நாம் அவன் எங்கோ இருந்து சூட்சமக் கயிற்றை அசைக்கிறான். நாம் ஆடுகிறோம். இருட்டிலும், வெளிச்சத்திலும் அவனே நம்மை வழி நடத்துகிறான். கல்லும் முள்ளும் குத்தி கீழே விழுந்தால் வேலும், அம்பும் பாய்ந்து இரத்தம் வடிந்தாலும், கன்னியரின் வளைகரங்கள் அணைத்தாலும், பதவியின் நாற்காலிகள் நமக்கு வரவேற்பு சொன்னாலும், அத்தனையும் இறைவன் கொடுத்த கொடை என்று அவனையே நினைக்கிறோம். அவனுக்காகவே வாழ்கிறோம். அப்படி நம்மை அவன் வாழ வைக்கிறான். அவன் சொற்படி எல்லாம் நடக்கும் மனித குலத்தோடு ஒட்டி உறவாட உலகத்தின் தகப்பனுக்கு ஆசை பிறக்கிறது. அதனால், அவன் அவதாரம் எடுக்கிறான்.