Wednesday, March 18, 2015

மசாலா மீன் வறுவல் !

மசாலா மீன் வறுவல் !

செய்முறை.
சுவையான மசாலா மீன் வறுவல் செய்வதற்கான குறிப்பு.
தேவையான பொருட்கள்
மீன் – 8 துண்டுகள்
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் – 8
கருவேப்பிலை – 4 கொத்து
மல்லிதழை – 2 அல்லது 4 கொத்து
எலுமிச்சம்பழசாறு – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மைதா – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க
செய்முறை
வெங்காயம், கருவேப்பிலை, மல்லிதழை ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
எலுமிச்சம்பழசாறு ,மிளகாய்த்தூள்,சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அரைத்த மசாலா சேர்த்து திக்கான மசாலா செய்து கொள்ளவும்.
மீன் துண்டின் இரு புறங்களிலும் மசாலா கலவையை தடவி விடவும். அதன் மேலே மைதா மாவை தூவி 1 மணி மேரம் வரை ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , மிதமான சூட்டில் மீனை இரு புறமும் பொரித்தெடுக்கவும்.

சுவையான முருங்கைக்காய் மிளகு


சுவையான முருங்கைக்காய் மிளகுக் கோழி செய்வதற்கான எளிய செய்முறை குறிப்பு

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/4 கிலோ
முருங்கைக்காய் – 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 250௦ கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 6
பச்சை மிளகாய் – 2
மிளகுத்தூள் – 4 தேக்கரண்டி
மல்லித்தழை – 1/2 கட்டு
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

காய்ந்த மிளகாயை விதை நீக்கி சேர்க்கவும். இதனுடன் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கலாம்.

இதனுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
சிக்கன், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

பொடி செய்து வைத்துள்ள வெள்ளை மிளகையோ அல்லது கருப்பு மிளகையோ காரம் பார்த்து தகுந்தாற்போல் சேர்க்கவும்.

நன்கு சுண்டி வரும் வரை வேக விடவும். சிறிது மசாலா கலவை இருக்குமாறு பார்த்து இறக்கவும்.

மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குறிப்பு :

விருப்பமெனில் ஒரு தக்காளியை ஜூஸ் போல் பிழிந்து பயன்படுத்தலாம்.

Monday, March 16, 2015

மிளகாயை விரும்பும் அம்பாள்!



மிளகாயை விரும்பும் அம்பாள்!

அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில் பிரத்யங்கிரா தேவிக்குரிய மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சிங்க முகத்துடன், கரிய உடலும் 18 கைகளில் சூலம், டமருகம், பாசம் முதலான ஆயுதம் தாங்கி இவள், பயம் போக்குவதோடு, மங்களத்தை அருள்கிறாள். அழகைக் கண்டு மகிழ்வதும், அழகற்றதைக் கண்டு வெறுப்பதும் உலக இயல்பு. ஆனால், அழகும், கோர வடிவும் கலந்தவளாக இவள் இருக்க காரணம், விருப்பு, வெறுப்பை சமமாக ஏற்கும் மனநிலை வேண்டும் என்பதால் தான். லலிதா சகஸ்ரநாமத்திலுள்ள "ஸகஸ்ராக்ஷி என்னும் பெயர் இவளைக் குறிக்கும். "ஆயிரம் கண்ணுடையாள் என்பது இதன் பொருள். பிரபஞ்சம் முழுவதையும் இவள் கண்காணிப்பதால் இப்பெயர் பெற்றாள். உக்ரமான இவளுக்கு, காரமான மிளகாய் விருப்பமானது என்பதால் அமாவாசை யாகத்தில் சிவப்பு மிளகாய் சேர்க்கப்படுகிறது. கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடியில் பாண்டவர்கள் வழிபட்ட பிரத்யங்கிராவுக்கு கோயில் உள்ளது.

தியானமும் பிரபஞ்ச சக்தியும்



தியானமும் பிரபஞ்ச சக்தியும்
உலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை .

இந்த பிரபஞ்சம் உருவாக யாரோ ஒருவர் முன்னதாக, ஏதோ ஒன்று வேறொன்றை உருவாக்கும் விதத்தில், இருந்திருக்க வேண்டும்.

அது ஒலிவடிவாய் இருந்து பின் ஒளிவடிவாய் ஆயிற்று. ஒளிக்கும் பரிமாணமும், நிறை (கனம்) யும் உண்டென்பதும் விஞ்ஞான உண்மை.

ஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி உருவமுண்டு.

ஒவ்வொரு ஒலிக்கலவைகளுக்கும் தக்கவாறு வானில் பலவித உருவங்களை ஒளி வரைகின்றது.

அதனுள் ஒளி ஏற்படுகையில் சக்தி என உயிர் வருகின்றது.அவ்வுயிரின் சக்தி நம் உடலுள் பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) ---யாகப் படருகின்றது.

இதைத்தொடர்ந்து நிகழச்செய்வதின் மூலம் உணவின் மூலம் ஏற்படும் சாதாரண வளர்சிதைமாற்றம் (METABOLISM) நிறுத்தப்பட்டு தெய்வீக சக்தி உடலைத் தன் பொறுப்பில் ஏற்கிறது.

மூச்சு நிற்கிறது.

மன ஆற்றல் என்ற யோக சக்தி இயற்கையை தன்வசப்படுத்துகிறது. இதுவே தியானம் என்ற தவத்தின் ஒரு நிலையாகும்.

இந்த ஒலி ரூபங்களை (குரல் உருவகங்களை) திருமதி வாட்ஸ் கியுசஸ் ஆராய்ச்சி முடிவை உலகுக்கு தந்தார்.

எந்த மந்திரத்தையும் ஒலிபேதமின்றி ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கும்போது அதற்குரிய உருவம் அதனுடைய சக்தியாய் நம்மையடைகின்றது .

வேத மந்திரங்களும் - உபதேச விஞ்சைகளும் இத்தகைய அதிர்வலைகளைக் கொண்ட சக்தியாவதே அதன் சிறப்பாகும். எனவே ஜபமும், தவமும் வலுப்பெறுகின்றது.

Sunday, March 15, 2015

விஞ்ஞானம் வளர்ந்த இந்த



விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், அதன் பின்பே ஸ்கேன் செய்து பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது. ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர். ஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர். 

"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி 
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ் 
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை" 

என்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி. அதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசியில் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம். இதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும்,கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள், குழந்தை குறைபாடு, கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர், மேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விடயங்களை நாம் தவற விடுகின்றோம். இவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே என் கருத்து.

அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து




அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பின் நீராடி வந்து பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை, அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து, தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.

நம் வீட்டுப் பிள்ளைகள் மூலமாக, களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வரச் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு அரையில் துண்டு கட்டி, பூமாலை, அறுகம்புல் மாலை அணிவித்து, மணைப் பலகையில் இருத்த வேண்டும். குன்றிமணியால் கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும்.

கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பத்ரங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும்.

Friday, March 13, 2015

ஒற்றுமை இருந்தால் உலகையே வளைக்கலாம்!



ஒற்றுமை இருந்தால் உலகையே வளைக்கலாம்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு; நன்று இதைத் தேர்ந்திடல் வேண்டும்; இந்த ஞானம் வந்த பின், நமக்கு எது வேண்டும்... என்பது, தேசிய கவியின் வாக்கு. நம்மிடையே ஒற்றுமை இருந்தால், உலகையே நம் வசம் வளைக்கலாம். எத்தகைய இடர்பாடுகளையும், ஒற்றுமையினால் ஒன்மில்லாமல் செய்து விடலாம் என்பதற்கு, மகாபாரதத்தில் ஒரு காட்சி:

பாண்டவர்கள், வனவாசத்தின் போது, காட்டில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு, மேலும் மன வருத்தத்தை உண்டாக்குவதற்காக, துரியோதனன் தன் பட்டாளத்தோடு காட்டிற்கு போனான். அங்கே அவன், மிகுந்த ஆர்பாட்டத்தோடு கத்தி, கூச்சலிட்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த போது, கவுரவர்களுக்கும், சித்ரசேனன் என்ற கந்தவர்வனுக்கும் போர் மூண்டது. கந்தவர்வனிடம், துரியோதனனின் வாய் வீரமும், கை வீரமும் பலிக்கவில்லை. கவுரவர்களை அடித்துக் கட்டி, இழுத்துக் கொண்டு போனான் கந்தர்வன். அப்போது, துரியோதனன், அங்கே காட்டிலிருந்த தர்மரின் காதுகளில் விழுமாறு, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... எனக் கத்தி கூச்சலிட்டான். துரியோதனனின் அபயக் குரலைக் கேட்ட தர்மர், உடனே பீமனிடம், தம்பி... கவுரவர்கள் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டனர் என நினைக்கிறேன். நீ போய் அவர்களை மீட்டு வா... என்று சொன்னார்.

பீமன் மறுத்து, துரியோதனன் செய்த தீமைகளை எல்லாம் வரிசையாக எடுத்துச் சொல்லி, நமக்கு பதிலாக கந்தர்வன், துரியோதனாதிகளுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறான். வேடிக்கை பார்ப்பதை விட்டு, காப்பாற்றச் சொல்கிறீர்களே; என்னால் முடியாது... என்றான். அதைக் கேட்டதும், தர்மர் மிகுந்த விவேகத்தோடு, நீ சொல்வது தவறு. கவுரவர்களும், நாமும் ஒரே குடும்பத்தினர். நமக்கும், அவர்களுக்கும் உள்ள பிரச்னை என்பது, நம் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டது. ஆனால், வெளியாள் ஒருவனால், நம் குடும்பத்தை சேர்ந்தோருக்கு பிரச்னை வந்தால், அது நமக்கு வந்ததாக கருத வேண்டுமே தவிர, அவ்விடத்தில் பிரிவினை பேதம் பேசக் கூடாது. அதனால், அந்தப் பகைவனுக்கு எதிராக, நாம் நூற்றி ஐந்து பேர்களாகி, நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையாக இருந்து, நம் சகோதரர்களை காப்பாற்ற வேண்டும். நீ அவர்களை காப்பாற்ற மறுத்தால், நான் போய் காப்பாற்றுவேன்... என்றார். பிறகென்ன, துரியோதனன் காப்பாற்றப்பட்டான். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஆயிரம் மனப்பேதங்கள் இருந்தாலும், ஒற்றுமையை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஒற்றுமையாக இருப்போம்; உயர்வை அடைவோம்!.