Friday, March 13, 2015

ஒற்றுமை இருந்தால் உலகையே வளைக்கலாம்!



ஒற்றுமை இருந்தால் உலகையே வளைக்கலாம்!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு; நன்று இதைத் தேர்ந்திடல் வேண்டும்; இந்த ஞானம் வந்த பின், நமக்கு எது வேண்டும்... என்பது, தேசிய கவியின் வாக்கு. நம்மிடையே ஒற்றுமை இருந்தால், உலகையே நம் வசம் வளைக்கலாம். எத்தகைய இடர்பாடுகளையும், ஒற்றுமையினால் ஒன்மில்லாமல் செய்து விடலாம் என்பதற்கு, மகாபாரதத்தில் ஒரு காட்சி:

பாண்டவர்கள், வனவாசத்தின் போது, காட்டில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு, மேலும் மன வருத்தத்தை உண்டாக்குவதற்காக, துரியோதனன் தன் பட்டாளத்தோடு காட்டிற்கு போனான். அங்கே அவன், மிகுந்த ஆர்பாட்டத்தோடு கத்தி, கூச்சலிட்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த போது, கவுரவர்களுக்கும், சித்ரசேனன் என்ற கந்தவர்வனுக்கும் போர் மூண்டது. கந்தவர்வனிடம், துரியோதனனின் வாய் வீரமும், கை வீரமும் பலிக்கவில்லை. கவுரவர்களை அடித்துக் கட்டி, இழுத்துக் கொண்டு போனான் கந்தர்வன். அப்போது, துரியோதனன், அங்கே காட்டிலிருந்த தர்மரின் காதுகளில் விழுமாறு, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... எனக் கத்தி கூச்சலிட்டான். துரியோதனனின் அபயக் குரலைக் கேட்ட தர்மர், உடனே பீமனிடம், தம்பி... கவுரவர்கள் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டனர் என நினைக்கிறேன். நீ போய் அவர்களை மீட்டு வா... என்று சொன்னார்.

பீமன் மறுத்து, துரியோதனன் செய்த தீமைகளை எல்லாம் வரிசையாக எடுத்துச் சொல்லி, நமக்கு பதிலாக கந்தர்வன், துரியோதனாதிகளுக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறான். வேடிக்கை பார்ப்பதை விட்டு, காப்பாற்றச் சொல்கிறீர்களே; என்னால் முடியாது... என்றான். அதைக் கேட்டதும், தர்மர் மிகுந்த விவேகத்தோடு, நீ சொல்வது தவறு. கவுரவர்களும், நாமும் ஒரே குடும்பத்தினர். நமக்கும், அவர்களுக்கும் உள்ள பிரச்னை என்பது, நம் குடும்பத்தோடு சம்பந்தப்பட்டது. ஆனால், வெளியாள் ஒருவனால், நம் குடும்பத்தை சேர்ந்தோருக்கு பிரச்னை வந்தால், அது நமக்கு வந்ததாக கருத வேண்டுமே தவிர, அவ்விடத்தில் பிரிவினை பேதம் பேசக் கூடாது. அதனால், அந்தப் பகைவனுக்கு எதிராக, நாம் நூற்றி ஐந்து பேர்களாகி, நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து, ஒற்றுமையாக இருந்து, நம் சகோதரர்களை காப்பாற்ற வேண்டும். நீ அவர்களை காப்பாற்ற மறுத்தால், நான் போய் காப்பாற்றுவேன்... என்றார். பிறகென்ன, துரியோதனன் காப்பாற்றப்பட்டான். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஆயிரம் மனப்பேதங்கள் இருந்தாலும், ஒற்றுமையை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஒற்றுமையாக இருப்போம்; உயர்வை அடைவோம்!.

No comments:

Post a Comment