நூலால் கண்ணாடியை அறுக்கும் ஜாலம்
இதெல்லாம் சாத்தியமா, அல்லது வெறும் கற்பனையா என எண்ண வைக்கும் செயல்களையே "ஜாலம்" என்கிறோம். சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே இத்தகைய ஜால வித்தைகள் பலவும் அருளப் பட்டிருக்கின்றன. இவற்றின் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் முடிவில்லாத ஒன்று. ஆர்வமும், நேரமும் உள்ள எவரும் இந்த ஜால வித்தைகளைப் பற்றி ஆய்ந்தறியலாம்.
சித்தர் பெருமக்களின் ஜால வித்தைகளைப் பற்றிய சில தகவல்களை முன்னரே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை வாசிக்கலாம்.
முந்தைய பதிவொன்றில் நூலினைக் கொண்டு இரும்பை அறுக்கும் ஒரு ஜாலம் பற்றி பார்த்தோம். அந்த வரிசையில் இன்று நூலினைக் கொண்டு கண்ணாடியை அறுக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்தத் தகவல் போகர் அருளிய "போகர் ஜாலவித்தை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல். அந்தப் பாடல் பின்வருமாறு...
கனத்தநல்ல கண்ணாடி யறுப்பதற்கு
கண்மணியே ரவையுமல்ல கல்லுமல்ல
வனத்தினிலே இருக்குமுடுக் கிலைதானப்பா
வண்மையா யதினுடைய ரசத்தைவாங்கி
இனத்துடனே வெள்ளை வுண்டை நூலைவாங்கி
இண்டான ரசத்தினிலே தோய்த்துர்த்தி
கனத்துடனே சனங்களுக்கு காட்டி நூலாம்
கண்ணாடி தனையறுக்கத் துண்டாய்ப்போமே.
முடுக்கி இலையின் சாற்றினை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதில் வெள்ளை உண்டை நூலை நன்கு ஊறவைத்து, நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த நூலைக் கொண்டு கண்ணாடி அல்லது கண்ணாடி புட்டியை அறுத்தால் இரண்டு துண்டுகளாகி விடும் என்கிறார் போகர்.
No comments:
Post a Comment