எந்த ஒரு மனிதனை பார்த்தாலும் அவனைப் பற்றி உடனடியாக நமக்குள் எழும்பும் கேள்வி இவன் வயது என்னவாக இருக்கும் என்பதுதான். சாதாரணமான மனிதனின் வயதையே அறிந்து கொள்ளும் ஆர்வம் வரும் போது மதங்கள் போன்ற பெரிய பெரிய விஷயங்களை அறிந்து கொள்ளும் பொழுது இது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்ற சிந்தனை வருவது தவிர்க்க முடியாததே ஆகும்.
5,000 வருடங்களுக்கு முன்பு பாரசீகத்தில் தோன்றிய ஸ்ராஸ்திய மதத்திலிருந்து யூதர் ஹீபுரு மதம் தோன்றி அதிலிருந்து கிறிஸ்துவ மதம் தோன்றி கிறிஸ்துவத்தின் பெருவாரியான கொள்கைகளை சித்தாந்தங்களை உள்ளடக்கி இஸ்லாம் மதம் உருவாகி இன்று 1500 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இம்மதங்களுக்கு முன்னரே நமது இந்து மதம் தோன்றிவிட்டது. அதாவது ஸ்ராஸ்திய மதம் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மதம் உருவாகிவிட்டது என்று சொல்லலாம்.
பொதுவாக இந்து மதத்தின் தோற்றத்தை வேத காலத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் நம்முடைய வழக்கமான மரபு. ஆனால் இந்து மதம் உண்மையில் வேதகாலத்தில் தான் தோன்றியதா அல்லது அதற்கு முன்னரே தோன்றிவிட்டதா என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் சிந்திப்பது இல்லை. காரணம் நமக்கு வேதகாலம் என்பதே எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது என்பது சரிவர தெரியாத போது அதற்கு முன்பே உள்ள காலத்தை எப்படி கணித்து பார்க்க முடியும். அப்படி முடியாது என்பதினால் காலங்களை அறிந்து கொள்ளும் நமது ஆர்வத்தையும் முயற்சிகளையும் கைவிட்டு விடமுடியுமா எனவே வேதகாலத்திற்கு முற்பட்ட காலத்தை அறிந்து கொள்ள நம்மால் முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போம். அப்படி பார்த்தால் தான் இந்து மதத்தின் தொன்மையை நாம் உணர முடியும்.
புவியியல் அறிஞர்கள் உலகத்தில் மனித இனம் தோன்றியது தென்னிந்தியாவில் தான் என்று சொல்கிறார்கள். இவர்களின் இந்த கூற்றுக்கு சில யூகங்கள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறதே தவிர அறிவியல் சார்ந்த அசைக்க முடியாத சான்றுகள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை இருந்தாலும் கூட நமது இந்திய நாட்டை பொறுத்த வரையில் மனித இனம் தோன்றியது தெற்கில் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் நமக்கு கிடைத்து உள்ளன.
பல கோடி ஆண்டுகள் வயதுடைய முதுமையான கற்பாறை படிவுகள் தென்னிந்தியாவில் காணப்படுகிறது. அப்பாறை படிவுகள் இருக்கும் பகுதிகள் காடுகளும் மலைகளும் சார்ந்த பகுதிகளாக இருப்பதினால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனித சமூகம் வாழ்ந்திருக்க வேண்டும். எப்படியென்றால் இங்குதான் அதிக சிரமப்படாமல் மனிதர்கள் வேட்டையாடி மிருகங்களை உணவாக்கிக் கொள்ளவும் காய் கனிகளை பெற்றுக் கொள்ளவும் வாய்பிருந்திருக்கிறது. மேலும் விந்திய மலை தொடருக்கு வடக்கே இன்று பரந்து கிடக்கும் கங்கை சமவெளியும் இமயமலை தொடரும் ஒரு காலத்தில் கடலுக்குள் மூழ்கி கிடந்திருக்கிறது.
இன்று கூட இமயமலை சிகரங்களின் உச்சியில் கடல்வாழ் உயிரனங்களின் படிமங்கள் படிந்திருப்பதை பார்க்கும் பொழுது இமயம் கடலுக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்ற உறுதி ஏற்படுகிறது. வட இந்திய பகுதி கடலுக்குள் மூழ்கி கிடந்த காலத்தில் தென்னிந்தியா தான் உயரமாகவும் காடுகளும் மலைகளும் சூழ்ந்ததாகவும் இருந்திருக்க வேண்டும் அதனால்தான் மனித இனம் இந்தியாவை பொறுத்த வரை தெற்கில் தான் தோன்றியிறுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். புவியியல் கணக்கு படி சுமார் ஐந்துகோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இமயமும், கங்கை சமவெளியும் கடலுக்குள்ளிருந்து வெளிவந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஆக ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கன்யாகுமரியிலிருந்து தெற்கே நெடுந்தொலைவிற்கு நிலப்பரப்பு பரந்து கிடந்ததாகவும் அந்த பகுதிதான் லெமுரியா கண்டம் என்று ஒரு சில வல்லுநர்கள் கூறுகிறார்கள். முதன் முதலில் மக்களினம் லெமுரியா கண்டத்தில் தான் தோன்றியதாகவும் இன்று இலங்கையிலும் மேற்கிந்திய தீவுகளிலும் தென்னிந்தியாவில் வாழக்கூடிய மக்கள் அந்த ஆதிமனிதர்களின் வாரிசுகள் என்று கருதப்படுகிறது. அப்படி கருதுவதற்கு காரணமும் இருக்கிறது. இந்த பகுதிகளின் நில அமைப்பு வாழும் மக்களின் உடலமைப்பு தோலின் நிறம் ஆகியவைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக காணப்படுகிறது. இதுமட்டுமல்ல நியுஜிலாந்தில் வாழும் மேவா என்ற ஆதிமக்களின் மொழியமைப்பில் தமிழ்சொற்கள் பல இருக்கின்றன. மேலும் மேற்கிந்திய தீவு மக்களின் சில பழக்க வழக்கங்களும் வழிபாட்டு முறைகளும் சின்னங்களும் சற்றேரக்குறைய தமிழ் மரபோடு ஒத்து அமைந்திருக்கிறது.
போர்னியாவில் உள்ள ஆதி குடிமக்களான டயாப்புகளும் நமது ஆனைமலை பகுதியில் வாழும் காடர்கள் என்ற மலை சாதியினரும் ஒரே மாதிரியான வகையில் மரம் ஏறும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது தவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள நீக்ரோக்களுக்கும் தமிழ்நாட்டு வனவாசிகளுக்கும் உருவத்திலும் நடை உடை பாவனையிலும் சமயச் சடங்குகளிலும் ஒற்றுமையிருப்பதை இன்றும் காணலாம்.
இலங்கை தமிழ் மக்களுக்கும் நமக்கும் உள்ள ஒருமைப் பாட்டை சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
இவைகளையெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது விந்திய மலைத் தொடங்கி ஆப்ரிக்கா வரையில் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதை நம்பாமல் இருக்க முடியாது. நமது பழந்தமிழ் இலக்கியங்கள் மிகப்பெரும் கடல்கோள் ஒன்று ஏற்பட்டு தமிழ்நிலப் பகுதிகள் பலக்கூறுகளாக பிரிந்து போய்விட்டதாக பதிவு செய்து வைத்திருக்கிறது. இந்த கடல் கோளினால் லெமோரியா கண்டம் இந்திய நிலப்பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டது அல்லது அழிந்துபோய் விட்டது என்று சொன்னால் மிகையாகாது.
கடல் சீற்றத்தால் லெமோரியா கண்டம் அழிந்த பொழுதுதான் இமயமலையும் கங்கைச் சமவெளியும் நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கடல் தாக்கத்திலிருந்து தப்பி பிழைத்த மக்கள் வடக்கு நோக்கி குடிபெயர்ந்திருக்க வேண்டும். அப்படி குடிபெயர்ந்து வாழ்ந்த மக்களின் நாகரீக சுவடுகள் தான் சிந்து சமவெளி நாகரீகம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். வரலாற்று அறிஞர்களை வியப்பிலும் திகப்பிலும் ஆழ்த்தக்கூடிய பல பொருட்கள் சிந்து சமவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வழி முழுவதும் பரவி இருந்த ஒரு பெரும் நாகரீகத்தின் சின்னங்களாக அவைகள் இன்று நமக்கு காட்சி தருகின்றன. மொகஞ்சதரோ, ஹராப்பா ஆகிய இரு புதை நகரங்களிலும் காணப்படும் கட்டடங்களின் அமைப்பும் நகரங்களின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அந்த காலத்தில் மொகஞ்சதரோ வளமையான நகரமாக விளங்கியதாகவும் பெரும் வெள்ளத்தினால் அந்நகரம் ஏழுமுறை தாக்கப்பட்டு மண்மூடிப் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
மொகஞ்சதரோவிலும் ஹராப்பாவிலும் ஊருக்கு வெளியே கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன அக்கோட்டைகள் மன்னர்களின் அரண்மனைகளாகவும் படைவீரர்களின் பாடிவீடுகளாகவும் பயிற்சி கூடங்களாகவும் இருந்திருக்க வேண்டும். அவைகளில் பெரிய பெரிய நீச்சல் குளங்களும் நேரான சாலைகளும், நெற்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மத குருமார்களுக்கு தனிதனி குடியிறுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்நகர மக்கள் அழகான மண்பாண்டங்களும் பொம்மைகளும் வெண்கல சிலைகளும் செய்ய கற்றிருந்திருக்கின்றனர்.
செப்பேடுகள் எழுதும் பழக்கமும் அவர்களிடம் இருந்திருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய நாணயங்களிலும் சில பட்டையங்களிலும் சில பாத்திரங்களிலும் இந்து கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்ட முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிந்து வழி எழுத்துக்களில் அடிக்கடி ஒரு குறி வருகிறது மூடியில்லாத மண்பாண்டத்தை போன்று அந்த குறி வரையப்பட்டுள்ளது. அது அரசமரத்தை குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த ஆய்வு குழவினர் கூறுகிறார்கள். இது அரசமரத்தை காட்டும் குறியல்ல மரக்கலத்தை அதாவது படகை சுட்டிக்காட்டும் குறியென்று பின்லாந்து நாட்டை சேர்ந்த அறிஞர்கள் கருதுகிறார்கள். அந்த குறியீட்டை நாம் நேரடியாக பார்க்கும் பொழுது அரச மரத்தை காட்டும் குறியாகவே அது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர மரக்கலத்தை காட்டுவதாக தோன்றவில்லை.
சிந்து வழி நாகரீகத்தில் முன்னூறு வகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. அதில் ஒரு எழுத்துக்கு கூட இன்று வரை அர்த்தம் கண்டுபிடிக்கபடவில்லை இந்த எழுத்துகள் தவிர பல வித சித்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த சித்திரங்களில் பெருவாரியானவைகள் விலங்குகளும் ஆயுதங்களும் தெய்வங்களும் மனிதர்களும் ஆகும். அந்த விலங்கு சித்திரங்களை பார்ப்பவர்கள் வேதத்தில் குறிப்பிடும் யாகங்களில் பலியிடப்படும் விலங்குகளை காட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த கூற்றில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.
காரணம் என்னவென்றால் யானைகளும் காண்டாமிருகங்களும் அந்த ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன. எந்த சூழலிலும் இத்தகைய மிருகங்களை வேள்விகளில் பலியிடப்பட்டதாக வேதத்தில் எந்த குறிப்பும் கிடையாது எனவே இந்த முத்திரை சித்திரங்கள் நிச்சயமாக வேதங்களை சார்ந்தது அல்ல என்று துணிந்து கூறலாம். இது மட்டும் அல்ல இந்த சித்தரங்களில் வேதங்களில் குறிப்பிடப்படும் தெய்வ உருவங்கள் எதுவுமே வரையப்படவில்லை.
மேலும் அந்நகர சுவடுகளில் கிடைக்கும் எல்லாவகையான சமயச்சார்புடைய ஆதாரங்களை திரட்டி பார்க்கும் பொழுது சிந்துவெளி மக்களின் சமய வாழ்க்கைகும் வேதங்களில் குறிப்பிடப்படும் சமய வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக கருதமுடியாது. ஒன்று அந்த மக்கள் வேதம் சாராத வழிபாட்டை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேதகாலத்திற்கு முற்பட்ட சமயநெறியை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
ஆரியர்கள் இந்தியாவிற்குள் குடியேறி வந்ததாக ஒரு சாராரும் இல்லை அவர்களும் இந்நாட்டின் பூர்வ குடிகள் தான் என்று ஒரு சாராரும் முடிவே இல்லாமல் வாதாடி வருகிறார்கள். இன்னொரு சாரார் திராவிடர்கள் கூட இந்தியாவில் குடியேறியவர்களே தவிர பூர்வ குடிகள் அல்ல என்று கூறுகிறார்கள் எல்லோருமே தங்களது வாதங்களுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களை தருகிறார்கள். அவற்றில் எது சரி எது தவறு என்ற முடிவிற்கு நம்மால் வரமுடியவில்லை காரணம் அனைவரின் தரப்பிலும் கொஞ்சமாவது உண்மையிறுப்பதை நம்மால் உணரமுடிகிறது.
ஆனால் இந்த வாதபிரதி வாதங்களில் இந்த மதத்தை பொறுத்த வரையில் அசைக்கமுடியாத ஒரு உண்மையை நாம் பெற முடிகிறது. அந்த உண்மை என்னவென்றால் வேதங்களுக்கு முன்பே இந்து மதம் இந்த நாட்டின் தாய் மதமாக இருந்திருக்கிறது. என்பது தான் அது. எதைவைத்து இந்த முடிவை நான் சொல்கிறேனென்றால் சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய கடவுள் உருவங்களில் பல வேதங்களில் குறிப்பிடப்படாதவைகள் இருக்கின்றன. அது மட்டுமல்லாது அந்த மக்களின் வழிபாட்டு முறைகள் பல வேதக்கருத்துகளுக்கு மாறுபாடுடையதாக இருந்திருக்கின்றது. அதற்கு பல ஆதாரங்களை நம்மால் கூறஇயலும்.
சிந்து சமவெளியில் பல இடங்களில் லிங்க உருவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மக்கள் லிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று துணிந்து கூறலாம். ஆனால் வேதங்களில் லிங்க வழிபாடு என்பது சிறப்பித்து கூறப்படவில்லை. மாறாக கேலி செய்யும் பாணியிலேயே சில வேத ஸ்லோகங்கள் அமைந்துள்ளன. இவைகளை வைத்து பார்க்கும் பொழுது வழிபட்டவர்களும் கேலிசெய்பவர்களும் ஒருவராகவே இருப்பார்கள் என்று கூறமுடியாது. வேதகால மக்கள் சிந்து வழியில் வாழ்ந்தவராக இருந்து பிறகு கங்கை வெளியில் பரவி குடியேறி இருப்பார்கள் ஆனால் சிந்துவெளி சின்னங்களாக எழுத்து முத்திரைகளும் செப்பேடுகளை பொறிக்கும் வழக்கத்தையும் தம்முடனே கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் வேதகால நாகரீகத்தில் இவைகள் முற்றிலுமாகவே இல்லை என்று சொல்லலாம்.
வேதகால மக்களின் மனித சித்திரத்தையும் சிந்துவெளி மக்களின் மனித சித்திரத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது மிகப்பெரும் வித்யாசம் இருப்பது தெரிகிறது. சிந்துவெளி மனிதனின் உதடுகள் தடித்து பிதுங்கி உள்ளதையும் வேதகால மனித உருவம் அதற்கு மாறுபட்ட வடிவில் நேர்த்தியாகவும் அமைந்திருக்கிறது. மொகஞ்சதரோ பகுதியில் கிடைக்கும் களிமண் முத்திரைகளை பசுபதி வடிவிலுள்ள சிவபெருமான் அமைதியான யோக முத்திரையுடன் காணப்படுகிறார். ஆனால் வேதத்தில் குறிப்பிடப்படும் ஸ்ரீ ருத்ரன் ரௌத்ர காலத்தில் அதாவது கோபாவேச மூர்த்தியாக காட்டப்படுகிறது. இது மட்டுமல்லாது பெண் தெய்வ வழிபாடு சிந்துமக்களிடம் போற்றத்தக்க அளவில் இருந்திருக்கின்றது. ஆனால் வேதங்களில் பெண் தெய்வங்களுக்கு உரிய முக்கியத்துவம் ஆரம்பத்தில் கொடுக்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.
No comments:
Post a Comment